தி.மு.கழகத்தின் தனிநபர் அவதூறு அரசியல் இன்று உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இதுபோன்ற அநாகரிக அரசியலை தமிழகத்தில் துவக்கி வைத்ததில் திமுகவிற்கு - குறிப்பாக - கருணாநிதியின் காலகட்டத்திற்குப் பிறகு - பெரும் பங்குண்டு. கட்சி அடையாளங்களைத் தாண்டி நாவலர் நெடுஞ்செழியன், காளிமுத்து, நாஞ்சில் மனோகரன், வைகோ போன்றவர்களின் பேச்சைக் கேட்பதற்காகவே பெருந்திரளாக கூடும் காலக்கட்டம் முன்பிருந்தது. ஆனால் இன்று கருணாநிதி உட்பட அனைத்துக் கட்சியின் பேச்சாளர்களுமே தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான் அளவிற்கு தரமிரங்கியுள்ளனர்.
பல திறமையான பேச்சாளர்களின் மூலம் ஒரு காலத்தில் கட்சியைப் பலப்படுத்தின திமுக இன்று வடிவேலுவையும் அவரது தனிநபர் பழிவாங்குதல் பேச்சையும் பிரதானமாக முன்னிறுத்துவது அநாகரிகத்தின் உச்சக்கட்டம்.
அதிகாரத்தை தமிழ்த் திரையின் மூலம் குறுக்குவழியில் கைப்பற்றுவது எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து தொடர்ந்து வரும் அரசியல் அவலம். விஜயகாந்த்தும் அதே வழியில் தொடர்ந்து முன்னேறி வருவது இன்னும் தமிழகம் இந்த மனோபாவத்திலிருந்து விலகி வரவில்லை என்பதையே காட்டுகிறது. இந்த அவலம் ஒருபுறமிருக்கட்டும்.
வடிவேலு விஜயகாந்த்திடமுள்ள தனிப்பட்ட பகையை தீர்த்துக் கொள்ள தாமாகவே முன்வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இவர் போகுமிடமெங்கும் பிரதானமாக கிண்டலடிப்பது விஜய்காந்த்திடமுள்ள குடிப்பழக்கத்தை. இதை பொதுமக்களும் விவஸ்தையின்றி கைத்தட்டி ரசிப்பது ஒருபுறமென்றால், இதையே கருணாநிதியின் ஊடகக்குழுமம் ஹைலைட் செய்வது அயோக்கியத்தனம்.பல குடும்பங்கள் அவதிப்படுவதை கண்டும் காணாமல் டாஸ்மாக்கின் மூலம் பலகோடி வருமானத்தை ஒருபுறம் ஈட்டிக் கொண்டிருக்கும் கருணாநிதியின் அரசு, குடிப்பழக்கத்தை கிண்டலடிக்கும் அநாரிகமான பிரச்சாரத்தை இன்னொரு புறம் ஊக்குவிப்பதில் எவ்வித அறமுமில்லை. மேலும் குடிப்பழக்கம் அற்றவர்கள்தான் தமிழக அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதை ஒரு விதியாகவே கொண்டு வந்தால், தலைவர்கள் உட்பட இன்றுள்ள 99% அரசியல்வாதிகள் உடனே அதிலிருந்து விலகிக் கொள்ள நேரிடும். குடிப்பழக்கம் தீயது என்றால் அதையே ஒருபுறம் அரக்கத்தனமாக மக்களிடம் வளர்த்துக் கொண்டு மறுபுறம் அதையே ஒரு குறையாக சித்தரிப்பதும் அது போன்ற அநாகரித்தை ஊக்குவிப்பதும் தமிழக அரசியல் எந்தளவிற்கு போலித்தனமானதாகவும் தரங்குன்றியும் உள்ளது என்பது வெளிப்படை.
வாய்க்கு வாய் எம்ஜிஆரை நண்பர் என்று இன்று சொல்லிக் கொண்டு வரும் கருணாநிதி, ஒரு சமயத்தில் அவரை எத்தனை அநாகரிகமாக, கேவலமான வார்த்தைகளில் விமர்சித்திருக்கிறார் என்பதை அரசியல் அறிந்தவர்கள் உணர்வார்கள். மக்களின் வரிப்பணத்தை அவர்களுக்கான அடிப்படை வசதிகளுக்கான திட்டங்களில் செலவழிக்காமல் இலவசப் பொருட்களை வழங்கி தன்னுடைய மக்களுக்கு அந்த அரசே வாக்களிக்க லஞ்சம் வழங்கும் ஒரு மோசமான முன்னுதாரணத்தை மற்ற மாநிலங்களுக்கும் ஏற்படுத்தி தமிழகத்திற்கு பெருமை சோத்திருப்பதில் திமுகவின் பங்கு அசாத்தியமானது. இதையே போட்டிக் கட்சியான அதிமுகவும் நகலெடுததிருப்பதிலிருந்து இது இன்னமும் தரமிறங்கும் சூழலிற்குத்தான் கொண்டு செல்லும் என்பதை எளிதில் ஊகிக்கலாம்.
ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளர்கள் ஜெயித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பாவம் மக்கள்தான் தொடர்ந்து தோற்றுக் கொண்டேயிருக்கிறார்கள்.
Monday, April 4, 2011
Subscribe to:
Comments (Atom)